2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான அமைதி முயற்சிகள் இழுபறியாகவே தொடர்கின்றன.
இந்த நிலையில், உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புதின் முதல் முறையாக அறிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 30 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் அமுமல்படுத்தப்பட்ட நிலையில், அது நேற்று முடிவடைந்தது. அதன் பின்னர், போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக மக்களின் உயிர்களை பாதுகாக்கும் நோக்கில், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை தாக்கக்கூடாது என்ற தன்னியக்கக் கொள்கையை உக்ரைன் தொடர்ந்து பின்பற்றுவதாகவும், மாஸ்கோவிடம் இருந்து தெளிவான பதிலை எதிர்பார்ப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய ஜனாதிபதி புதின், “போர் நிறுத்தம் குறித்து நாங்கள் நேர்மறையான அணுகுமுறையுடன் இருக்கிறோம். அமைதிக்கான எந்த முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்த உள்ளம் கொண்டவர்கள். உக்ரைனும் அதே மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்,” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இந்த வாரம் இலண்டனில் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.