நாட்டில் தற்போதுள்ள நிலையால் மக்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்படக் கூடும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரசமசிங்க எச்சரித்துள்ளார்.
தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க வேண்டுமாயின் அரசாங்கம், உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி, மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
தற்போதைய பொருளாதார நிலை குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள சிறப்பு காணொளியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணில் விக்ரமசிங்க,
(டொலர் பற்றாக்குறை நெருக்கடியான நிலைக்கு வந்துள்ளது. இதன் விளைவுகளைத் தாக்கிக் கொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வியாபாரங்கள் வீழ்ச்சி கண்டுள்ளன. வேலைவாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். விவசாயிகள் கையறு நிலைக்கு விடப்பட்டுள்ளனர். இவற்றுக்கு உடனடி தீர்வு அவசியம்.
கொவிட் தொற்று நெருக்கடி இருந்தாலும், 2021ஆம் ஆண்டில் சில நாடுகள் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. நாமும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தை உடனடியாக நாடி, உதவியைப் பெற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று வழியை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.
இவை இரண்டும் நடக்கவில்லை. தற்போதைய நிலையால், நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். இதனைத்தவிர தற்போது மற்றுமொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அதுதான் நாட்டில் ஏற்படப் போகும் உணவுப் பற்றாக்குறை. சித்திரைப் புத்தாண்டு காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று கிடைக்கும் அனைத்துத் தகவல்களும் தெரிவிக்கின்றன. கடந்த முறை விளைச்சலுடன் ஒப்பிடும் போது இம்முறை 60 வீத விளைச்சலே கிடைக்குமென்று தெரியவருகிறது.
இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால், இதனை எதிர்கொள்ள வேண்டிய அரசியல் பின்னணி குறித்து சிந்திக்க வேண்டும். தற்போது ஆத்திரமடைந்துள்ள மக்கள் கிளர்ந்தெழக்கூடும். அவ்வாறான கிளர்ச்சி அரசாங்கத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே, நாட்டை முன்னேற்ற வேண்டுமானால் இந்த நிலையைத் தடுக்க வேண்டும். கடனுக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவது குறித்து தற்போது அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்துகிறது. இதுதொடர்பான பேச்சை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அதுதொடர்பான ஒப்பந்தங்களையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கடன் வாங்குவதால் அல்லது கடனுக்கு உணவுப் பொருட்களை வாங்குவதால் டொலர் கையிறுப்புப் பிரச்சினைத் தீர்ந்துவிடாது. எனினும், தற்காலிகத் தீர்வாகவேனும், கடனுக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்கும் திட்டத்தை செயற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கிறேன்.)