அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2019ல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கோ அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கோ இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் ஆவணங்கள் அடங்கிய தொகுதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.