எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றையே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த முடிவு, இலங்கையின் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் பதவிகளின் வலையமைப்பின் மறுசீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் நிலவும் பாரிய பொருளாதார சவால்களின் பின்னணியில், இருதரப்பு உறவுகளை திறம்பட நடத்துவதை உறுதி செய்யும் அதேவேளையில், நாட்டிற்கு தேவையான வெளிநாட்டு கையிருப்புகளை பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் பணிகள்/பதவிகளை பராமரிப்பது தொடர்பான செலவினங்களை குறைக்கும் நோக்கில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.