மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை மின்சார சபையின் குறுகிய கால கடன்கள் மற்றும் பொறுப்புகள் 2024 ஆம் ஆண்டில் 123.6 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதே போன்று நீண்டகால கடன்கள் 413.3 பில்லியன் ரூபாவில் இருந்து 409 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.
அதேநேரம், இலங்கை மின்சார சபை அதன் செலவுகளைக் குறைக்காமல் மேலும் கட்டணக் குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என மத்திய வங்கி அதன் வருடாந்த பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வாறு இல்லாத நிலையில் இலங்கை மின்சார சபையின் நிதி செயல்திறன் குறையலாம் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் உற்பத்தியான மொத்த மின்சாரத்தில் 32.6 சதவீதம் அனல் மின்னுற்பத்தியின் ஊடாகவும், 32.3 சதவீதம் நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாகவும் பெறப்பட்டுள்ளது.
21.2 சதவீத மின்னுற்பத்தி பாரம்பரியமற்ற முறைமைகளின் அடிப்படையிலும், 13.9 சதவீத மின்சாரம் எரிபொருளைக் கொண்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கிய தெரிவித்துள்ளது.