வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்ததில் 12 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, காயமடைந்த சிறுவன் தற்போது கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த 13ஆம் திகதி, குறித்த சிறுவன் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் அருகிலுள்ள கடை ஒன்றிற்குச் சென்றிருந்தான். அப்போது, அவர்கள் ஒரு மூன்று மாடி வீட்டு கதவைத் தட்டியுள்ளனர்.
அந்த வீட்டில் இருந்த ஒருவர், சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்று, இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்து வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
பயந்து போன சிறுவன், அங்கிருந்த ஜன்னலைத் திறந்து கீழே குதித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் முக்கிய சந்தேகநபர் தற்போது தப்பியோடியுள்ளார். எனினும், இந்தச் செயலில் உதவியதாக சந்தேகிக்கப்படும் 59 வயதுடைய நபரை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்யும் பணிகள் இப்போது இடம்பெற்று வருவதாகவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.