வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒதுக்கப்படும் நிதியை கிராமிய அபிவிருத்திக்காக வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்த தூய்மையான உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்குவதற்கு முன்வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். யாழ்ப்பாணம் கரைநகரில் நேற்று (11) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,
இந்த நாடு வளமான கலாச்சார மரபுகளைக் கொண்ட நாடு, எமக்கு ஒரு வளமான வரலாறு உண்டு.
கரைநகர் பற்றி எனக்குக் கிடைத்த தகவல்களால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். 1977 ஆம் ஆண்டில், கரைநகரில் சுமார் 80,000 பேர் வசித்திருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று 10,500 பேர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு என்ன ஆனது? அவ்வாறே வட மாகாணத்தில் வசதி படைத்தவர்களும் படித்தவர்களும் கரைநகரில் வசிக்கிறார்கள் என்றும் நான் அறிந்தேன், அது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஆனால் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் கற்கவும், செல்வந்தர்களாகவும், ஏதாவது வேலை செய்யவும் கரைநகரை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.
அவ்வாறு செல்ல முடியாமல்போனவர்களைப் பற்றி யார் பேசுவது? அவர்கள் எமது நாட்டின் குடிமக்கள், ஏனைய அனைவரையும் போலவே அவர்களுக்கும் சம உரிமைகள் இருக்க வேண்டும். கல்வி அமைச்சர் என்ற முறையில் கரைநகரில் கல்வி நிலை குறித்து கேட்டறிந்தேன். அதன் போது, உயர்தர கல்வியை வழங்கும் இரண்டே இரண்டு பாடசாலைகள் தான் உள்ளன என்பதை அறிந்தேன். இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
மேலும், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் அனைத்துப் பிள்ளைகளும் கரைநகரை விட்டு வெளியேறி மேலதிக கல்விக்காக யாழ்ப்பாணம் செல்கின்றனர்.
கல்வி மூலமே மக்களின் பெறுமானங்கள் அதிகரிக்கின்றன, மேலும் கல்வி மூலமே மக்கள் செழிப்படைகிறார்கள். கல்வி மிகவும் முக்கியமானது, ஆனால் இந்தப் பிரதேசம் பல தசாப்தங்களாக தரமான கல்விக்கான உரிமையை இழந்துள்ளது.
மேலும், இந்தப் பகுதியில் தண்ணீர்ப் பிரச்சினையும் உள்ளது. தண்ணீர் ஒரு அடிப்படைத் தேவை, மக்கள் சுத்தமான தண்ணீரைப் பெற பணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் ஊழல் காரணமாக ஒருபோதும் நிறைவு செய்ய முடியவில்லை.
பிரதேச மட்டத்தில், வீதிகள், போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் ஊழல் காரணமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்து 16 ஆண்டுகள் ஆகின்றன, அன்றும் இன்றும் என்ன வித்தியாசம் ஏற்பட்டுள்ளது? ஏன் இந்தப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை? இதனால்தான் உள்ளூராட்சித் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதேச மட்டத்தில் உள்ள பிரச்சினைகள் உள்ளூராட்சி நிறுவனங்களால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் எமது அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத் திட்டத்தை நாங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். அதன்மூலம் கல்வி, சுகாதாரம், பொதுமக்கள் நலன், உட்கட்டமைப்பு, பொது போக்குவரத்து போன்ற அனைத்திற்கும் அனைத்து உள்ளூராட்சி கணக்குகளுக்கும் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பணத்தை விவேகத்துடன் செலவிட வேண்டும்.
அதற்கு, ஊழல் இல்லாத தூய்மையான நிர்வாகம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேவை. எனவே, இந்தத் தேர்தலில், ஊழல் மற்றும் மோசடி இல்லாத மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஒரு குழுவை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டில், இந்த நாட்டு மக்கள் ஏற்கனவே இருந்த அரசியல் கலாசாரத்தைமாற்ற முடிவு செய்தனர். மீண்டும் மே 6 ஆம் திகதி மக்கள் தங்கள் கிராமத்திற்காக சிந்தித்து முடிவுகளை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.