அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக முடக்கி விடப்பட்ட இனவாதம் தொடர்பில் ‘கர்ப்பப் பை யுத்தம்’ (‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂ යුද්ධය’) எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நூல் ஏப்ரல் 4ஆம் திகதி தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய வித்தியாரத்ன பிரிவெனா கல்லூரியின் கலாநிதி தியகடுவ சோமானந்த தேரர் அவர்கள்.
கடந்த காலங்களில் சில மதகுருமார்களும் இனவாத கருத்துக்களை தூண்டினார்கள் எனவும் மக்களிடமிருந்து இனவாத கருத்துக்களை அகற்ற கலையும் இலக்கியமும் பிரதான பங்கு வகிப்பதாகவும் அதற்கு இவ்வாறான புத்தகங்கள் முன்னுதாரணமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
மேலதிக கல்வி பணிப்பாளர் வசந்தி திசாநாயக்க ‘இனவாதத்தை தோற்கடிப்பதில் கல்வியின் பங்கு’ எனும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில்,
இந்தக் காலகட்டத்தில் வைத்தியர் ஷாபியும் அவரது பிள்ளைகளும் அனுபவித்த மன வேதனையையும், இந்த சம்பவம் டாக்டர் ஷாபியின் பிள்ளைகளின் கல்வியை எவ்வளவு பாதித்தது என்பதையும் நினைவு கூர்ந்தார். பல ஊடகங்கள் போதிய அறிவின்றி இனவாத கருத்துக்களை சமூகமயப்படுத்தியதன் மூலம் அரசியல் வியாபாரத்துக்கு ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் எவ்வளவு தூரம் உடந்தையாக இருக்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டியதோடு முழு நாடும் இந்த குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
ஆண்டன் சார்ள்ஸ் தோமஸ் பாதிரியார் தனது உரையில்,
இலங்கையில் மதத் தீவிரவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும் அதற்கு டாக்டர் ஷாபியின் சம்பவம் சாட்சியாகும் எனவும் குறிப்பிட்டார். பலரும் பௌத்தத்தை ஒரு மதமாக நினைத்திருந்தாலும் அது ஒரு தர்மமாகும். அந்தவகையில் பௌத்தம் தர்மமாக இலங்கைக்கு கிடைத்திருப்பது ஆசிர்வாதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இனவாதம் செயல்படும் போது நாட்டில் சட்டரீதியான பொறுப்புக்கள் தொடர்பில் சட்டத்தரணி துலான் தசநாயக்க உரையாற்றினார்.
பொய்யான வழக்கு சோடிக்கப்பட்ட டாக்டர் ஷாபி சிறையில் அடைக்கப்பட்டது தற்காலத்தில் நடைபெற்ற வேதனையான நிகழ்வாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் டாக்டர் ஷாபி உரையாற்றும் போது,
தனது இருண்ட நாட்களை ஞாபகப்படுத்தியதோடு தனக்கு நிகழ்த இந்த அசம்பாவிதங்களில் நல்ல பக்கங்களை மட்டும், தான் எடுத்துக்கொண்டதாகவும் இந்த நூலும் அவ்வாறான நல்லதொரு பக்கமே என்று அவர் தெரிவித்தார். தனக்கு எதிராக நடந்துகொண்டவர்களுக்கு சட்டத்தாலும் இயற்கையாகவும் வழங்கப்பட்ட தண்டனைகள் தொடர்பில் இதனுடைய இரண்டாவது பதிப்பும் வெளிவர வேண்டும் எனவும் இதுபோன்ற நிகழ்வுகள் இனியும் நடக்கக் கூடாது எனவும் அவர் கூறினார்.