அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் இணைந்து நாட்டில் சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற திட்டங்களை குறைத்ததாக கூறி, அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நேற்று லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். அப்போது அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்றினார்.
அதன் அடிப்படையில் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கினார். இதற்காக தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் சிறப்பு துறை உருவாக்கப்பட்டது.
அடுத்ததாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு வெளிநாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை அந்தந்த நாடுகளுக்கும் விதித்தார்.
அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்யும் வகையில் அதிகாரத்தை வலுப்படுத்துவது; சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோரை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது. திருநங்கையரின் பாலினத்தை அங்கீகரிக்க மறுத்து உத்தரவு, ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய முடிவுகளையும் டிரம்ப் எடுத்துள்ளார்.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இதுவரை 1.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஏழை அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு உதவி திட்ட நிதியை பெருமளவு குறைத்துள்ளார். இதனால் 7.4 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்பின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் 1,400க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ‘ஹேண்ட்ஸ் ஆப்’ எனப்படும், ‘உரிமைகளில் கைவைக்காதே’ என்ற பெயரில் பெரியளவில் போராட்டம் நடந்தது.
மாகாண தலைநகரங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், தேசிய நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள இடங்களில் இந்த போராட்டம் ஜனநாயக கட்சியின் ஆதரவு இயக்கங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இதில் பங்கேற்றவர்கள் பல வகை எதிர்ப்பு பதாகைகளை ஏந்தி போராடினர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க்கை சர்வாதிகாரி ஹிட்லர் போன்று சித்தரித்திருந்தனர். சிலர் எலான் மஸ்க்கை நாடு கடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.