ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கெப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 183 ஓட்டங்களை எடுத்தது.
டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 77 ஓட்டங்களை எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 69 ஓட்டங்களை எடுத்தார். டெல்லி தரப்பில் விப்ராஜ் நிஹாம் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை முதல் ஆட்டத்தில் மட்டும் (மும்பை) வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்ட சென்னை ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் சென்னை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
“.. டெல்லிக்கு எதிரான போட்டியில் தொடக்க வரிசை சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காகதான் கான்வேயை கொண்டு வந்தோம். ஆனால், அது சரியாக அமையவில்லை. திரிபாதி நல்ல ரிசல்ட்டை தரவில்லை என்பதால் நேற்றைய போட்டியில் மாற்றங்களை மேற்கொண்டோம்.
ஆனால், அது பலன் அளிக்கவில்லை. முதல் வரிசை வீரர்கள் சிறப்பாக விளையாடினால் தான் பின்வரிசை வீரர்களை தேவைக்கு ஏற்றார் போல் களம் இறக்க முடியும். இந்த பேட்டிங் ஆர்டர் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது..”