வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடி ஆராய்ந்தபோதே இந்த விடயம் தெரியவந்தது.
இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இது விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்துபார்க்கும்போது இது தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 1077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திரங்களுக்காக இரண்டு பிரதான நிறுவனங்கள் வசதிகளை வழங்கும் இறக்குமதியாளர்களாகச் செயற்பட்டிருப்பதாகவும் குழுவுக்குத் தெரியப்படுத்தினார்.
இதன் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன் 2024 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு அதிசொகுசு வரி விலக்கு எல்லை 6 மில்லியன் ரூபாவிலிருந்து 12 மில்லியன் ரூபா வரை உயர்த்தப்பட்டமையால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட வருமான வரி இழப்பு 2.42 பில்லியன் ரூபா என்றும் கணக்காய்வாளர் நாயகம் குழுவில் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளிநாட்டுக்குச் சென்றிராத நபர்கள் நான்கு பேருக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரியவந்தது.
இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஆகக் குறைந்தது வெளிநாட்டில் இருக்க வேண்டிய கால அளவு சுற்றுநிருபத்தில் சரியான முறையில் குறிப்பிடப்படவில்லை என்றும், இதனால் 3 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரையில் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், அவ்வப்போது வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய நபர்கள் உள்ளிட்டவர்களம் இத்திட்டத்தின் கீழ் இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தைப் வழங்குவதற்கு முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமையும் இங்கு புலப்பட்டது.
முன்னாள் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய அமைச்சின் முன்னாள் செயலாளரினால் இதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினருக்கு மாத்திரம் சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்கள் என்ற ரீதியில் இத்திட்டத்தின் கீழ் இணைந்து சேவையாற்றும் போது நேரடியாகச் செயற்பட முடியாத நிலைமை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகத் தான் பணியிட மாற்றம் பெற்றுக் கொண்டதாகவும் இங்கு வருகை தந்திருந்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமைய, இவ்விடயம் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் அதன் அறிக்கையைக் கையளிக்குமாறும், இந்த மோசடிச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் கோபா குழு அதிகாரிகளுக்கு அறிவுறத்தல் வழங்கியது.