இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று(04) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் இன்று மாலை வருகைத் தரவுள்ளமையினால், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் பேஸ்லைன் வீதி இன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இடைக்கிடையில் மூடப்படவுள்ளது.
குறித்த காலப்பகுதியில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள், வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம் மற்றும் பத்தரமுல்லை அபே காமா பிரதேசப் பகுதிகளில் உள்ள வீதிகள பல சந்தர்ப்பங்களில் மூடப்படவுள்ளன.
இதனால் மாற்று வீதிகளுக்கு திருப்பிவிடுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நாட்டை விட்டு வெளியேறும் 6 ஆம் திகதி, காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, அனுராதபுரம் நகரின் முக்கிய வீதிகள், ஜெய ஸ்ரீ மகா போதி மற்றும் ரயில் நிலையத்திற்கு அருகில் பிரதான வீதியை அவ்வப்போது மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் புனித தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள், எந்தவித சிரமமும் இல்லாமல் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, போக்குவரத்து அதிகாரிகள், மாற்று வீதிகளுக்கு வழிகாட்டுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.