அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே சாப்பிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு.
பிஸ்கெட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். தினமும் தொடர்ந்து பிஸ்கெட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும். நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
பிஸ்கெட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும். பிஸ்கெட்டில் ‘ட்ரான்ஸ்ஃபேட்’ என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.
அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், அஜீரணம், மந்தம், மலச்சிக்கல், சில சமயங்களில் இதயக் கோளாறைக் கூட உண்டுபண்ணிவிடும்.
விட்டமின் சத்து இல்லாத, சத்துப் பொருட்கள் இல்லாத, நார்ச்சத்து இல்லாத சில பிஸ்கெட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் சில அழகழகான, கவர்ச்சியான, ருசியான பிஸ்கெட்டுகளை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?
அனைத்து உலக மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவாகிய பிஸ்கெட்டை எப்பொழுதாவது சாப்பிடுங்கள். வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் பசிக்கும் போதும் சரி, ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்ட போதும் சரி பயணங்களின் போதும் சரி சாப்பிட உணவே கிடைக்காத இடத்தில் சிக்கி அவஸ்தைப்படும்போதும் சரி பிஸ்கெட் மாதிரி ஒரு சிறப்பான உணவு வேறெதுவும் இல்லை.