அரசின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையின் தலைவர் பதவியிலிருந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் விரைவில் விலகுவார், என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நெருக்கமான நண்பர் எலான் மஸ்க். இவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை ஆதரித்து இவர் தீவிர பிரசாரம் செய்தார்.
டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.
மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் மே மாத இறுதியில் முடிவடைகிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே மஸ்க் இந்த பதவியில் இருந்து விலகுவார் என டிரம்ப் தன் அமைச்சர்களிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தன் நிறுவனப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்தவதற்காக மஸ்க் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.