அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அதிக வரிவிதிப்பை ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
இந்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதி டிரம்ப் பேசுகையில், ஏப்ரல் 2-ம் திகதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப் போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க பொருட்கள் மீது எந்த அளவு வரி விதிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு பதிலுக்கு வரி விதிப்போம் எனவும் கூறி வந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, “அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது. இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும்பொருளாதார போர் என்பது மேற்கு நாடுகளை பலவீனப்படுத்தி விடும்.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு தகுந்த பதில் நடவடிக்கை கொடுப்போம். எதிர்த்து நிற்போம் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.