மியன்மாரில் நேற்று மாலை 5.1 மெக்னிடியூட் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்று முன்தினம் ஏற்பட்ட நில அதிர்வு மற்றும் பின்னதிர்வுகளால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்ததுடன், 3,400 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மியன்மாரின் நே பேய் தாவ பகுதியிலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவானதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது. நில அதிர்வினால் 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், நில அதிர்வினால் பாரியளவில் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 4 மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மின்சாரம் விநியோகிக்கப்படுவதாகவும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தின் பெங்கொக் பகுதியில் இடிபாடுகளுக்குள் சுமார் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனவும் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.