எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ அல்லது மோடியைக் காப்பாற்றுவதோ அல்ல என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (30) நடைபெற்ற ஒரு நிகழ்வுக்குப் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர்,
“.. மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, இந்தியப் பிரதமருடன் உரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவர் பிரச்சினைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பகையும் இல்லை. இந்திய மீனவர்களுக்கும் எமக்கும் எந்தவித கோபமும் இல்லை.
இந்திய மீனவர்கள் தடை செய்யப்பட்ட ட்ரோலர்களைப் பயன்படுத்தி எங்கள் கடற்பரப்பில் செயல்படுவது சரியான வேலை அல்ல.
வடக்கில் உள்ள கடற்பரப்பை முற்றாக அழித்து ஒழிக்கும் நடவடிக்கையையே அவர்கள் மேற்கொள்கின்றனர். இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், இன்னும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகளில் கடல் பாலைவனமாக மாறுவதைத் தவிர்க்க முடியாது. இதனை யாரும் அனுமதிக்க முடியாது.
எனது வேலை இந்திய அரசாங்கத்தைப் பாதுகாப்பதோ, இந்தியத் தூதுவரைப் பாதுகாப்பதோ, இந்தியப் பிரதமரைப் பாதுகாப்பதோ அல்ல. எமது மீனவர்களைப் பாதுகாப்பதே எனது பணி. அந்த வேலையை நான் சரியாகச் செய்கிறேன் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.”
-யாழ். நிருபர் பிரதீபன்-