மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் தரமான, போதியளவான உணவை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்துகொடுக்க, நாடளாவிய ரீதியில் புதிய உணவகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேசிய உணவு ஊக்குவிப்புச் சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து தற்போது உணவகங்களை நடத்தி வரும் வர்த்தகர்களின் ஆதரவுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாவது மாதிரி உணவகம் ஏப்ரல் 1ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் திறக்கப்படவுள்ளது. இதன் இரண்டாம் கட்டமாக தற்போதுள்ள உணவகங்களின் தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மக்களின் உரிமையை உறுதிப்படுத்தல், சரியான சுகாதாரத் தரத்திற்கு ஏற்ற உணவை பெற்றுக்கொள்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குதல், நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், அது தொடர்பில் அரச மற்றும் தனியார் துறைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், உணவு தரப்படுத்தல் மற்றும் தரம் தொடர்பில் நாட்டில் காணப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்துதல், நுகர்வோருக்கு சத்தான மற்றும் போசாக்கான மற்றும் சுகாதார பாதுகாப்பு மிக்க உணவை வழங்குதல் குறித்த வர்த்தக சமூகத்தின் அணுகுமுறை மாற்றத்தை உருவாக்க “Clean Srilanka” திட்டத்தின் மூலம் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.