தேஷபந்து தென்னகோனின் நியமனத்துக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நேற்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;
“.. அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ள நிலையில் அதனை மறைப்பதற்கு பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
அதன் அடிப்படையில் தற்போது பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கு பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு கையளித்திருக்கிறது.
ஆனால் இந்த பிரேரணை தொடர்பில் தேடிப்பார்க்காமல், அரசாங்கத்தின் இந்த பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருக்கிறார். எந்த அடிப்படையில் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார் எனத் தெரியாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்போது பொலிஸ்மா அதிபராக இருந்த சி.டி விக்ரமரத்னவின் பதவியை நீடித்து, அதற்காக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பிரதிநிதியுமே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
அந்த பின்னணியிலேயே தேஷபந்துவின் வருகை இடம்பெற்றது. அதனால் தேஷபந்துவின் நியமனத்துக்கு சஜித் பிரேமதாசவும் பொறுப்புக்கூற வேண்டும்..”