இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Mr. Paitoon Mahapannaporn) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், இலங்கைக்கான தாய்லாந்து தூதர், சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, மக்களுக்கு தரம்வாய்ந்த சுகாதார சேவைகளை வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்களை வலுப்படுத்த தாய்லாந்து அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.
இலங்கைக்கான தாய்லாந்து தூதர் பைதுன் மஹாபன்னபோன், இந்த ஆண்டு தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவை இந்த தருணத்தில் நினைவுபடுத்தினார்.
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், கண்டி தேசிய மருத்துவமனையை மையமாகக் கொண்டு எலும்பியல் மருத்துவத் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் அறுவை சிகிச்சைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தாய்லாந்தில் உள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் இலங்கை மருத்துவர்களுக்கும் இடையே அறிவு மற்றும் திறன்களைப் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பையும் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இலங்கையில் தாய்லாந்து முதலீட்டை அதிகரிப்பது மற்றும் தாய்லாந்தின் சுற்றுலாத் துறையின் வெற்றிக்குப் பங்களித்த விடயங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன, மேலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தாய் தூதர் இலங்கையுடன் ஒத்துழைப்பார் என்றும் கூறப்பட்டது.