அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட துப்பாக்கிப் பிரயோகத்தில் 04 பேர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் (24) இரவு பொலிஸ் போக்குவரத்து பிரிவு சார்ஜன்ட் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 02 சார்ஜன்ட்கள் மற்றும் 02 கான்ஸ்டபிள்கள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதன்போது காயமடைந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் மேலும் இரண்டு பொலிஸ் உத்திகேத்தர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய சார்ஜன்ட், T-56 ரக இரண்டு துப்பாக்கிகளும் 19 ரவைகளுடன் எத்திமலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியதன் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.