பலஸ்தீன் காஸா மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி இப்புனித ரமழான் மாதத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் பலஸ்தீன் காஸா பகுதிகளில் உள்ள மக்கள் மீது நிகழ்த்தப்பட்டு வரும் மனிதப் படுகொலைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பலஸ்தீன் காஸா மக்கள் தஞ்சமடைந்திருக்கும் முகாம்கள், வைத்தியசாலைகள் மற்றும் குடியிருப்புக்கள் மீது ஆக்கிரமிப்பு இராணுவம் நிகழ்த்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் என தொடர்ந்தும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஈவிரக்கமின்றி அநியாயமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அப்பாவிப் பொதுமக்கள் மீதான, எவ்வித நியாயங்களும் கற்பிக்க முடியாத இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிப்பதோடு, இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு அப்பாவி உயிர்கள் மேலும் பலியாவதை தடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறது.
அல்லாஹு தஆலா அப்பாவி பொதுமக்களைப் பாதுகாத்து, உலகில் அமைதியையும் நீதியையும் நிலைநாட்டுவானாக!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.