அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களுக்கு 25 சதவீத புதிய வரியை அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த புதிய வரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் அமுலுக்கு வருமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நடவடிக்கைகள் கார் துறையின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனவும் அமெரிக்காவில் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் வகையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாத்திரம் அமெரிக்கா சுமார் 80 இலட்சம் கார்களை இறக்குமதி செய்துள்ளது.
இதனூடாக 240 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக அமெரிக்காவுக்கு அதிக கார்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மெக்சிகோ உள்ளதுடன், அதற்கு அடுத்தபடியாக தென்கொரியா, ஜப்பான், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளும் கார்களை ஏற்றுமதி செய்கின்றன.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.