“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணி, மத்திய மாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகைளை ஆரம்பித்துள்ளது.
நேற்று (25) முற்பகல் மாத்தளை மாவட்டச் செயலகத்துக்கும் பிற்பகல் கண்டி மாவட்டச் செயலகத்துக்கும் வருகை தந்த மாகாண மதத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள், செயலணியிடம் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
குழுவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர், வருகை தந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுள்ளதுடன், குறித்த காலத்துக்கு முன்னதாகவே குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிது காலம் சென்றாலும், அனைத்து மக்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கின்ற மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளை முன்வைப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய இரண்டு நாட்களில் மத்திய மாகாண மக்களின் கருத்துக்கள் தொடர்ந்தும் கேட்டறியப்படவுள்ளன.