நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவது மற்றும் அது தொடர்பான விபத்துகளைக் குறைப்பது குறித்து பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டினுள் முச்சக்கர வண்டிகளை செலுத்துவது அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விபத்துகளின் எண்ணிக்கையும் சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டினரிடம் முச்சக்கர வண்டியை செலுத்துவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப் பத்திரம் இல்லை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அதற்கான சரியான பயிற்சியும் இல்லை.
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்களை வழங்கும் போது குறிப்பாக முச்சக்கர வண்டிகளை நாட்டினுள் செலுத்துவதற்கு வெளிநாட்டினருக்கு வழங்கும் போது செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கிறார்களா? என்பதை முறையாகச் சரிபார்த்து, அவர்களுக்கு உரிய வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வாகனங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.