ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும், இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளன.
வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடனான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இந்தப் கலந்துரையாடல்கள் மார்ச் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றன. இதன் முக்கிய நோக்கம், மூன்று ஆண்டுகளாக நடைபெறும் ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கூறுகிறது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்:
கருங்கடலில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து:
ரஷ்யாவும் உக்ரைனும் கருங்கடலில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளன.
கருங்கடலில் பயன்படுத்தப்படும் வணிகக் கப்பல்களை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்துவதைத் தடுக்கவும், பலத்தை பயன்படுத்துவதை நிறுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஆற்றல் உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் தடை:
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ஆற்றல் தளங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டுள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளது.
விவசாய ஏற்றுமதி மீட்பு:
ரஷ்யாவின் விவசாய மற்றும் உர ஏற்றுமதிகளை உலக சந்தைக்கு மீண்டும் கொண்டு வருவதற்கு அமெரிக்கா உதவி செய்யும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதற்காக கடல் காப்பீட்டு செலவுகளை குறைப்பது, துறைமுகங்களுக்கான அணுகலை மேம்படுத்துவது மற்றும் பரிவர்த்தனைகளுக்கான பணம் செலுத்தும் முறைகளை எளிதாக்குவது ஆகியவை உள்ளடங்கும்.
இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கு மூன்றாம் நாடுகளின் உதவியை வரவேற்பதாகவும், நீடித்த மற்றும் நிலையான சமாதானத்தை அடைவதற்கு தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அமெரிக்காவும் ரஷ்யாவும் உறுதியளித்துள்ளன.
உக்ரைன் தரப்பில், கருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு அப்பால் ரஷ்ய இராணுவக் கப்பல்களின் எந்தவொரு நகர்வும் இந்த ஒப்பந்தத்தின் உணர்வை மீறுவதாகக் கருதப்படும் எனவும், அவ்வாறு நிகழ்ந்தால் தற்காப்பு உரிமையை பயன்படுத்துவதற்கு உக்ரைனுக்கு முழு உரிமை உள்ளது எனவும் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம், 2022 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் துருக்கியால் தரகு செய்யப்பட்ட கருங்கடல் தானிய முன்முயற்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அந்த ஒப்பந்தம் உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதியை பாதுகாப்பாக மேற்கொள்ள அனுமதித்தது, ஆனால் 2023 ஜூலையில் ரஷ்யா அதிலிருந்து விலகியது.
தற்போது அமெரிக்காவின் முயற்சியால், கருங்கடல் வழியாக வணிகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் இயல்பாக்குவதற்கும், உலக உணவு விநியோகத்திற்கு பங்களிக்கும் வகையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், போர்க்களத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், கருங்கடல் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்கும், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.