டிரம்பின் வரி அச்சுறுத்தலையடுத்து, சீனாவுடனான வர்த்தகத்திற்கு தீவிரமாக இந்தியா தயாராகி வருகிறது. எல்லை பிரச்சினை தற்போது பெரியதாக இல்லாத நிலையில், வர்த்தகத்திற்கு இந்த நேரம் சரியானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
எங்கள் நாட்டு பொருட்களுக்கான வரியை குறைக்கவில்லையெனில் நாங்களும் கூடுதல் வரியை போடுவோம் என்று இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனை சமாளிக்க சீனாவுடன் வியாபாரம் செய்ய இந்தியா ரெடியாகி வருகிறது.
கடந்த 2020 கால்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தையடுத்து இந்தியா-சீனாவுக்கு இடையே பொருளாதார மோதல்களும் வெடித்தன. சீனாவின் சில பொருட்களுக்கு இந்தியா அதிரடியாக தடை விதித்தது. மட்டுமல்லாது சீன மொபைல் செயலிகளும் முடக்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும். ஆகவே இந்தியா பார்ட்னரை தேட வேண்டும். சீனா நல்ல ஆப்ஷன்தான்.
இன்றைய சூழலில் இந்தியா-சீனா இடையே சொல்லிக்கொள்ளும்படியான எல்லை பிரச்சினைகள் எதுவும் இல்லை. எனவே வர்த்தகத்தை மீண்டும் இயல்பாக்குவதற்கு சரியான நேரம் இதுதான். முதல் கட்டமாக சீன ஊழியர்களுக்கான விசா கட்டுப்பாடுகளை தளர்த்துவது, சீன மொபைல் செயலிகளை மீண்டும் அனுமதிப்பது, சில சீன பொருட்கள் இறக்குமதிக்கான வரிகள் மற்றும் வரி இல்லாத பொருட்களுக்கான வர்த்தக தடைகளை நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்தியா-சீனா இடையே பொருளாதார உறவை நாம் பழைய நிலைமைக்கு கொண்டு வரலாம்.
உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக சீனா இருப்பதால், அந்நாட்டுடன் வர்த்தகம் என்பது நமக்கு லாபகரமான விஷயம்தான். இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய பொருட்களை சீனாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யவும் நம்மால் முடியும். அதாவது, இன்றைய தேதியில் சீனாவிலிருந்துதான் இந்தியாவுக்கு அதிக பொருட்கள் வருகின்றன. இந்தியாவிலிருந்து அங்கு பொருட்கள் குறைவாகத்தான் ஏற்றுமதியாகிறது. இரண்டுக்கும் இடையே சுமார் ரூ.6,95,000 கோடி அளவுக்கு வர்த்தக பற்றாக்குறை இருக்கிறது.
சீனாவை முதன்மை முதலீட்டாளராக இந்தியா ஏற்றுக்கொண்டால் இதனை சரி செய்துவிடலாம். மறுபுறம் சீன நிறுவனங்களும் இந்தியாவில் வியாபாரம் செய்ய ஆர்வமாக இருக்கின்றன. எனவே இந்திய-சீன நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து வணிகத்தை தொடர அனுமதிக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அமெரிக்கா ஜர்க் ஆகிவிடும். ஏற்கெனவே பிரிக்ஸ் கரன்சி விஷயத்தை கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு டிரம்ப் கண்காணித்து வருகிறார். அப்படி இருக்கும்போது பிரிக்ஸ் கூட்டமைப்பு மேலும் உறுதியாக்கும் விதமாக இந்தியா-சீனா வர்த்தகம் அமைந்துவிட்டால் அது அமெரிக்காவுக்கு பின்னடைவுதான்.