மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, மியன்மாரின் மியாவடியில் உள்ள இணையக் குற்றவியல் மையங்களில் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக பணியமர்த்தப்பட்ட 14 இலங்கையர்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட 14 இலங்கையர்களும், மார்ச் 18 ஆம் திகதி இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்டு, பாதுகாப்பாகத் திருப்பி அனுப்புவதில் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்கள் அளித்த அளப்பரிய உதவிக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சானது தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு, மனித கடத்தல் திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சு கடுமையாக வலியுறுத்துகிறது.