நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (18) திட்டமிட்டபடி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சம்பளப் பிரச்சினை தொடர்பாக நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (18) காலை 7 மணி முதல் சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
இதன் காரணமாக, அரச வைத்தியசாலைகளின் மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்பநல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகள் இன்று பாதிப்படையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் வைத்தியசாலைகளில் அவசர, அத்தியாவசிய மற்றும் உயிர்காக்கும் சேவைகள் மாத்திரம் வழங்கப்படுமென குறிப்பிடப்படுகிறது.
இருப்பினும், நாடளாவிய ரீதியில் சிறுவர் மற்றும் மகப்பேறு வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள், மனநல மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளின் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்படமாட்டாது எனச் சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.