நன்னாரி சர்பத் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வெயில் காலங்களில் தாகத்தை தணிக்க அனைவராலும் விரும்பி குடிக்கப்படும் ஒரு பானம். ஒரு கிளாஸ் நன்னாரி சர்பத்தில் 72 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 15 கிராம் சர்க்கரை உள்ளது.
இதில் சபோனின், பிளவனாய்ட்ஸ், அல்கலாய்ட்ஸ், பினோலிக் காம்பௌண்ட்ஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. அது மட்டுமல்ல, இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து பிரீ ரேடிக்கல்களை வெளியேற்றுகிறது. இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் முடக்கு வாதம் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.
மேலும் இதிலுள்ள சபோனின் என்ற ஆன்டிஆக்ஸிடண்ட் தோலில் உள்ள அகநச்சுடன் கலந்து சொரியாசிஸ் நோய் விரைவில் குணமடைய உதவுகிறது. இதற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடுகள் உள்ளதால் நன்னாரி பல ஆண்டுகளாக தொழு நோய் மற்றும் சிபிலிஸ் நோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதிலிருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட் பிளேவனாய்ட்ஸ் கல்லீரல் பாதிப்புகளை தடுக்க துணை புரிகிறது. நன்னாரி சர்பத் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பையும் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல, நன்னாரி சருமத்திற்கு பொலிவை தருவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது வெயிலினால் ஏற்படும் நீர் இழப்பை சமன்படுத்த உதவுகிறது. நன்னாரி சர்பத்தை குடிப்பதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. எனினும் இதனை அதிக அளவு குடிக்கும் போது இதில் உள்ள சபோனின் சில சமயங்களில் வயிற்றில் எரிச்சல் அல்லது புண் போன்றவற்றை உண்டாக்க கூடும்.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பின்னரே நன்னாரி சர்பத்தை பருக வேண்டும். நன்னாரி சர்பத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருந்தாலும், இதில் உள்ள சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் சர்க்கரை நோயளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை அதிகமாக்க கூடும்.
அதனால் சர்க்கரை நோயாளிகள் நன்னாரி சர்பத் குடிக்கும் போது சர்க்கரை சேர்க்காமலோ அல்லது சர்க்கரைக்கு பதிலாக செயற்கை இனிப்பூட்டிகளை கலந்தோ பருகலாம். நன்னாரியை சர்பத் வடிவில் குடிப்பதை விட வெறும் வேர்களை சுத்தம் செய்து, மண்பானை தண்ணீரில் போட்டு தினசரி தேவைகளுக்கு குடிப்பதற்கு பயன்படுத்தினால் அதிக நன்மைகள் கிடைக்கும்.