இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவில் வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையின் பலனாக இது அமைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் நேற்று(15) கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இலங்கையினால் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஏற்பட்டுள்ள பல தொழிநுட்ப பிழைகள் காரணமாக குறித்த உரிமத்தை இத்தாலிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்க முடியவில்லை என பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இதன்படி, இந்த பிரச்சினை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலிய அரசாங்கம் அவர்களை அடையாளம் காணும் வகையில் இந்த நாட்டிலிருந்து சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம், அது தொடர்பான தொழில்நுட்ப பிழைகளை சமாளித்து இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியும் எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் 2022 ஆம் ஆண்டு முதல் இத்தாலியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அது தற்போதைய அரசாங்கத்தின் தவறல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தூதுவர்களினால் ஏற்பட்ட பிரச்சினையினால் 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.