ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இவ்வருடத்தில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்ப்பதாகவும்,சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று (15) பாராளுமன்றத்தில் ஒதுக்கீட்டு சட்டமூலம் 2025 வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த நாட்களில் 7000 – 8000 க்கு இடையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு நாளைக்கு நாட்டிற்கு வருவதாகவும், அவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விபரித்தார்.
சுற்றுலாத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்படும் சகல நபர்களையும் முன்னேற்றுவதற்காக பல்வேறு பயிற்சி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா முகாமைத்துவ நிறுவனம் இதுவரை காலமும் டிப்ளோமா பாடநெறியை மாத்திரமே வழங்கியதாகவும், எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி சுற்றுலாத்துறைக்காக பட்டம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் இதன்போது விபரித்தார்.