follow the truth

follow the truth

March, 15, 2025
HomeTOP2மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் 

மருந்துகளுக்கான விலைச் சூத்திரத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் 

Published on

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக ஒரு சிறப்பு நடைமுறை மூலம் வழங்கப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது.

அவசர மருந்துக் கொள்வனவு தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலையீடு தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதியின் கீழ் இன்றி, விரைவான பொறிமுறையின் மூலம் (Fast Track) விசேட நடைமுறையின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இதன் விளைவாக, பிரதம நிறைவேற்று அதிகாரியின் சொந்த விருப்பப்படி பதிவு விலக்குச் சான்றிதழ் கடிதங்களை வழங்கும் முறையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.

குறிப்பாக, 2022ஆம் ஆண்டிலிருந்த பிரதம நிறைவேற்று அதிகாரி இந்த முறையை ஏற்படுத்த தலையிட்டமை இங்கு தெரியவந்ததுடன், இந்தக் காலப் பகுதியில் கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இராப்போசன நிகழ்வில் பெருந்தொகையான மருந்துப் பொருட்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

எனினும், இதற்கு பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், இதனால் இவ்விடயம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதாகவும் புலப்பட்டது. இதுபற்றிக் கோப் குழு நீண்டநேரம் கலந்துரையாடியதுடன், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களைக் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானித்தது.

வாசனை திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளைப் பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படும் நிலைமைகள் இருப்பதாகவும், இதனால் வாசனைத் திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

எனினும், எந்தவொரு நிறுவனத்திற்கும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லையென்றும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதனை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை உருவாக்கி அதற்கான அதிகாரத்தைத் தமக்கு வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். எனவே, இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோப் குழு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியது.

அத்துடன், மருந்துக்களின் விலைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. விலைகளை ஒழுங்குபடுத்தும் பிரிவு 2022ஆம் ஆண்டு வரையில் இல்லையென்றும், 2022ஆம் ஆண்டு குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பிராந்திய ரீதியில் மருந்துகளின் விலைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் தொடர்பில் காணப்படும் தடைகள் நீக்கப்பட்டு விரைவில் இதனை நடைமுறைப்படுத்துமாறும் குழு வலியுறுத்தியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு 3,000 ரூபா கொடுப்பனவு இம்மாதத்தில்

70 வயதைக் கடந்த குறைந்த வருமானம் பெறும் முதியோரருக்கு வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவு, மார்ச் மாதத்தில், அஸ்வெசும...

இந்தியாவிடமிருந்து 50,000 தடுப்பூசிகள் நன்கொடை

நாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளுக்கு ரூ. 100,000 மில்லியன் பெறுமதியான 50,000 ஃபுரோஸ்மைடு ஊசிகள் (20மிகி/2மிலி) இந்திய உயர்...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்

தற்போது நாடு முழுவதும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், கொலைச் சம்பவங்களும் நடந்து வருகின்றமையினால் மக்கள் அச்சத்துடனும் சந்தேகத்துடனும் வாழ்கின்றனர்....