பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கடத்திய பயணிகள் ரயிலில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட ரயிலில் இருந்து பயணிகளை மீட்கும் பணியின் போது பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த 28 வீரர்கள் உயிரிழந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.
பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரயிலை வழிமறித்தனர்.
இதையடுத்து ரயிலில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். அதன்படி ரயிலில் சிக்கி பணயக்கைதிகளாக வைக்கப்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.