மோட்டார் வாகனத் திணைக்களம் குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வராமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதற்கு அமைய மீண்டுமொரு தினத்திற்கு உரிய தயார்ப்படுத்தல்களுடன் வருமாறு கூறி அதிகாரிகள் திருப்பியனுப்பப்பட்டனர்.
மோட்டார் வாகனத் திணைக்களத்தின் 2020, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து கலந்துரையாடுவதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அதிகாரிகள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டனர்.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடந்தகாலக் கூட்டங்களில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
குறிப்பாக இலங்கை சுங்கத்தின் கணினிக் கட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு முன்னர், இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பதிவுகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் முன்வைக்கப்பட்ட 25 விடயங்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட தற்போதைய நிலைமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தபோதும், அவ்வாறான அறிக்கையொதுவும் சமர்ப்பிக்கப்படவில்லையென கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
எனினும், அறிக்கையைத் தாம் வழங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறியபோதும், அவ்வாறான அறிக்கை தமக்குக் கிடைக்கவில்லையென கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார். வழங்கப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கையின் பிரதி குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைப் பரிசீலித்த கணக்காய்வாளர் நாயகம் அது குறித்துத் தான் திருப்தியடையவில்லையென குழுவில் தெிரவித்தார். அதிலுள்ள விடயங்கள் குறித்து குழு நீண்ட நேரம் கேள்விகளைக் கேட்டபோதும், அதிகாரிகளால் அவற்றுக்குப் பதிலளிக்க முடியவில்லை. பழைய தகவல்கள் தம்மிடம் இல்லையென்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, விசாரணைகளை இடைநடுவில் நிறுத்தியதுடன், பிறிதொரு தினத்தில் மீண்டும் அழைப்பதற்குத் தீர்மானித்தது. குறித்த தினத்தில் முழுமையான தயார்ப்படுத்தல்களுடன் வருமாறும் குழு வலியுறுத்தியது.