2024 உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாக, சுவிஸ் நாட்டு காற்று தரம் குறித்த தொழில்நுட்ப நிறுவன ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 5 நாடுகளாக சாட்(Chad), பங்களாதேஷ், பாகிஸ்தான், காங்கோ, இந்தியா ஆகியவை உள்ளன.
உலகின் மிகவும் மாசுபட்ட 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. அசாமில் உள்ள பைர்னிஹாட், டெல்லி, பஞ்சாபில் உள்ள முல்லன்பூர், பரிதாபாத், லோனி, புதுடெல்லி, குருகிராம், கங்காநகர், கிரேட்டர் நொய்டா, பிவாடி, முசாபர்நகர், ஹனுமன்கர், நொய்டா ஆகிய 13 நகரங்கள் அதிக மாசுபட்ட நகரங்களாக கண்டறியப்பட்டுள்ளன. உலகில் மாசுபட்ட தலைநகரங்களில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதேநேரத்தில், உலகின் மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் 2023-ல் 3வது இடத்தில் இருந்த இந்தியா, 2024ல் 5-வது இடத்திற்கு சென்றுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புகை மூட்டம் நிலவியது. குறிப்பாக பஞ்சாபில் நிலைமை பேரிடர் என அறிவிக்கப்பட்டு, சுமார் 2 மில்லியன் மக்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற வேண்டியிருந்தது.
சர்வதேச நுண்ணறிவு நிறுவனமான இப்சோஸின் அறிக்கையின்படி, பாகிஸ்தானில் 10 பேரில் ஏழு பேர் புகைமூட்டம் காரணமாக உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர் என தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, பகாமஸ், பார்பேடஸ், எஸ்டோனியா, கிரேனடா, ஐஸ்லாந்து, நியூசிலாந்து ஆகிய 7 நாடுகள் மட்டுமே உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த பி.எம்.,2.5 மாசு அளவீடு கட்டுக்குள் இருக்கும் நாடுகளாக கண்டறியப்பட்டுள்ளன.