சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழாக் காணுகிறது. 1974 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த இராஜதந்திர உறவுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் வலுப்பெற்று, பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்புகளில் சிறப்பான முன்னேற்றங்களை கண்டுள்ளன.
வர்த்தகம், முதலீடு, தொழிலாளர் தொடர்புகள் மற்றும் ஏனைய உதவிகள் என பல்வேறு துறைகளிலும் இந்த உறவுகள் விரிவடைந்துள்ளன. இந்த வரலாற்றுத் தருணத்தில் இரு நாட்டுக்குமிடையிலான இராஜதந்திர வரலாற்றை மீளாய்வு செய்யவும், முக்கிய சாதனைகளை நினைவுகூறவும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும்.
சவூதி – இலங்கை உறவுகள் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, மற்றும் பொதுவான நலன்களை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி, சக்தி வளங்கள், எரிபொருள் உற்பத்தி, மற்றும் மனிதாபிமான நன்கொடை முயற்சிகளில் உலகளவில் முன்னனி வகிக்கும் சவூதி அரேபியா, இலங்கையின் முன்னேற்றத்திலும் கடந்த காலங்களிலிருந்து முக்கிய பங்கு வகித்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.
அதேபோல், இந்து – பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய தளமாக விளங்கும் இலங்கை, அதன் வளமான கலாச்சாரம் மற்றும் திறமையான தொழிலாளர்ப் படை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு ஒத்துழைப்பில், சவூதி அரேபியாவுடனான சிறப்புப் பங்காளியாக திகழ்ந்து வருகிறது. இதனடிப்படையில் கடந்த காலங்களில், இரு நாடுகளும் உயர்மட்ட இராஜதந்திர கலந்துரையாடல்கள், முதலீட்டு முயற்சிகள், மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் வாயிலாக தமது உறவுகளை வலுப்படுத்துவதில் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
பொருளாதார ரீதியான ஒத்துழைப்பினை பொருத்தமட்டில், மத்திய கிழக்குப் பகுதியில் இலங்கையின் முக்கிய வர்த்தகக் கூட்டு நாடுகளில் ஒன்றாக சவூதி அரேபியா இருந்து வருகிறது, மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், சமீபத்திய ஆண்டுகளில் நிலையான வளர்ச்சியையும் கண்டிருக்கிறது.
குறிப்பாக, இலங்கையின் தேயிலை (Ceylon Tea) சவூதி நுகர்வோரிடையே பெரிதும் பிரபலமடைந்துள்ளதால், இந்த வர்த்தக உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன.
இத்தோடு, இலங்கையிலிருந்து தேங்காய, வாசனைச் சரக்குக்கள், ஆடைத் தயாரிப்புகள் மற்றும் கடல் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இதன் மூலம் வணிகத் தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவை பொருத்தமட்டில் அதனது முதலீடுகள் மூலம் சுற்றுலா, சக்தி மற்றும் ஆற்றல் துறைகளில் இலங்கைக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது. சவூதி அபிவிருத்தி நிதியம் (SFD) இலங்கையில் நெடுஞ்சாலைகள், குடிநீர் வழங்கல் அமைப்புகள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் போன்ற முக்கிய திட்டங்களுக்கு நிதியளிப்பதில் முக்கியமான பங்கு வகித்துள்ளது.
உதாரணமாக கிண்ணியா பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பாலம், கலுகங்கை அபிவிருத்தித் திட்டம், பதுளை-செங்கலடி நெடுஞ்சாலை நிர்மானம், நுரைச்சோழை வீடமைப்புத் திட்டம் மற்றும் எபிலெப்சி வைத்தியசாலை திட்டம் போன்ற முக்கிய திட்டங்களைக் குறிப்பிடலாம். இந்த அபிவிருத்தி திட்டங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு நிலையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியா – இலங்கை உறவுகளின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் பரிமாற்றம் காணப்படுகிறது. நீண்ட காலமாக சவுதி அரேபியா இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பிரதான தளமாக இருந்து வருகிறது, தற்போது 500,000க்கு மேற்பட்ட இலங்கையர்கள் சுகாதாரம், கட்டிடத் தொழில், வீட்டு வேலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி இலங்கை பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பு செய்வதாக அமைகிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நிதியியல் உறவுகள் மேலும் வலுவடைகின்றன. இந்த தொழிலாளர் படையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இரு அரசுகளும் தொழிலாளர் பாதுகாப்புகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன, இது இலங்கையர்களுக்கு சவூதி அரேபியாவில் மேம்பட்ட வேலை நிபந்தனைகள் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
மேலும், சவூதி அரேபியாவில் இலங்கைத் தொழில்முனைவோரின் வலுவான இருப்பு, கடந்த பல தசாப்தங்களில் இந்த இரு நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பினைக் எடுத்துக் காட்டுகிறது.
வர்த்தகம் தொழில் துறைகளைத் தாண்டி, இலங்கைக்கு சவூதி அரேபிய அளித்த மனிதாபிமான உதவிகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, இயற்கை அனர்த்தங்கள் போன்ற சூழ்நிலைகளில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSRelief) இலங்கைக்கு முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது.
சுனாமி,வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களின் போது சவூதி அரேபியா உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகள் மற்றும் நிதி ஆதரவு ஆகியவைகளை வழங்கியுள்ளது. அத்தோடு மருத்துவரீதியான முகாம்கள் மற்றும் திட்டங்களை அமைத்து பல சிகிச்சைகள், மருத்துவ உதவிகளையும் செய்து கொண்டு வருகிறது.
உதாரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தொடர்தேர்ச்சியாக வலஸ்முல்லை மற்றும் கத்தாங்குடி பிரதேசங்களில் நடைபெற்று வந்த கண் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டங்களை குறப்பிடலாம். சவூதி அரபியா இலங்கையின் அபிவிருத்தி துறையில், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரப் பிரிவுகளில் முக்கியமான பங்காற்றியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத ரீதியான தொடர்புகள் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம்கள் புனித ஹஜ் மற்றும் உம்ரா பயணத்தை மேற்கொள்வதன் மூலம், இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் இன்னும் வலுவடைகிறது. இந்தப் பயணங்களை யாத்திரிகர்களுக்கு வசதியாக அமைப்பதில் சவூதி அரேபியா குறிப்பிடத்தக்க முயற்சியை செய்து வருகிறது.
இலங்கை யாத்திரிகர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் வசதிகளை பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பையும் சவூதி அரசாங்கம் வழங்கி வருகின்றது. மேலும், சவூதி அரேபிய பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில்களையும் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன, இதன் மூலம் அவர்கள் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் பிற கல்வித் துறைகளில் உயர் கல்வியை தொடர மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அறிவுசார் மற்றும் பண்பாட்டு பரிமாற்றங்களை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துகின்றன.
எதிர்காலத்தைப் பொருத்தவரையில், சவூதி – இலங்கை உறவுகள் மிகுந்த வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்து கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. சவூதி அரேபியாவின், பொருளாதாரத்தை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்துவதையும், உலகளாவிய கூட்டாண்மைகளை மேம்படுத்துவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டமைந்துள்ள Vision 2030 திட்டத்திற்கு அமைவாக, இரு நாடுகளும் பொருளாதார மற்றும் இராஜதந்திர கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் அதிகம் ஆர்வம் காட்டி பல முயற்சிகளில் ஈடுபடுகின்ற தற்போதைய சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களும் இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி அவர்களும் பாராட்டுக்கு உரியவர்கள்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நினைவுகூரும் வகையில், கொழும்பில் ஒரு சிறப்பு நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிற நாட்டுத் தூதுவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உருப்பினர்கள், மற்றும் ஊடகப் பிரபலங்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் 50ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் சிறப்பு சின்னமொன்றும் அதிகாரப்பூர்வமாக இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது.