வைத்தியர்கள் உட்பட அரசு ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்ட போதிலும், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்வது நியாயமற்றது என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (04) கலந்து கொண்ட அமைச்சர், இது தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், கலந்துரையாட தயாராக இருப்பதாகக் கூறினார்.
நாளை (05) நடைபெறவிருக்கும் வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதாரம் தாங்கக்கூடிய வகையில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொருளாதாரம் மேலும் மீண்டு வரும்போது, அனைத்து அரசு ஊழியர்களும் இதன் மூலம் பயனடைய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
தேவையற்ற வேலைநிறுத்தங்களை நடத்தி பொதுமக்களை சிரமப்படுத்தவோ அல்லது நோயாளிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தவோ வேண்டாம் என்றும் அமைச்சர் வைத்தியர்களை கேட்டுக்கொண்டார்.