ரயில்களில் யானைகள் மோதி இடம்பெறும் விபத்துக்களை குறைக்க ஒரு முறையான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரியும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குழுவால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவில் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம், ரயில்வே பொது முகாமையாளர், போக்குவரத்து அமைச்சர், வனவிலங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விபத்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விபத்துகளைத் தடுக்க ரயில் சாரதிகளுக்கு வேக வரம்புகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், யானை விபத்துக்களைக் குறைக்க சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சர், வனவிலங்கு மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியான விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.