கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட இரண்டு பதிவுகள் குறித்து கொழும்பு உயர் நீதிமன்ற பதிவாளர், நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்துள்ளார்.
இந்தப் பதிவு கடந்த 21 ஆம் திகதி “பொத்தல ஜயந்த” மற்றும் “சனத் பாலசூரிய” என்ற பெயர்களில் உள்ள முகநூல் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் ஊடாக நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவாளரால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றப் பதிவாளர், நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குறித்த பேஸ்புக் பதிவுகளுடன் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றப்பத்திரிகை அண்மையில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.