இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையில் காசாவில் அணிவகுப்பு நடத்தி ஒப்படைத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது.
இதையடுத்து, நேற்று முன் தினம் பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் விடுதலை செய்தது.
இந்த நடவடிக்கையின்போதும் காசாவில் மேடை அமைக்கப்பட்டு அணிவகுப்பு நடத்தப்பட்டு பணய கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது மேலும் 2 பணய கைதிகளை ஹமாஸ் ஆயுதக்குழு வாகனத்தில் அழைத்து வந்துள்ளது.
அந்த பணய கைதிகள் தங்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுப்பது போன்ற காணொளியை ஹமாஸ் ஆயுதக்குழு வெளியிட்டது.
இந்த நடவடிக்கைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறும் வகையில் உள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது.
மேலும், 6 பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீனியர்களில் 620 பேரை விடுதலை செய்ய மேற்கொள்ளப்பட்டிருந்த ஒப்பந்தத்தையும் தற்காலிகமாக நிறுத்தியது.
பலஸ்தீனிய கைதிகள் 620 பேரையும் இஸ்ரேல் விடுதலை செய்யவில்லை.
பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாத நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்யாதவரை இஸ்ரேலுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் இரத்து செய்துள்ள நிலையில் பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் இருக்கும்படி இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.