இலங்கை அரசாங்கம் நாட்டில் குற்றங்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடும் அதேவேளையில், சில பாதாள உலகக் குழுக்கள் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன. மேலும் சில குழுக்கள் விசாரணைகளை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன, மேலும் அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் அரசியல் ஆதரவுடன் பாதாள உலகம் வளர்க்கப்பட்டதன் விளைவுகளை இன்று நாம் காண்கிறோம். ஆனால் இன்று அதற்கு எந்த அரசியல் ஆதரவும் இல்லை. மேலும், இன்று இதுபோன்ற பாதாள உலகக் குழுக்களுக்கு எதிராக சட்டம் விரைவாக செயல்படுத்தப்படுகிறது.
சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு தற்போது விசாரணையைத் ஆரம்பித்துள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு சட்டவிரோத ஆயுத விற்பனையும் நடைபெறாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத துப்பாக்கிகள் தொடர்பான விசாரனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. இந்த விசாரனைகள் முப்படையினரால் மேற்கொள்ளப்படுகிறது. பலர் சட்டவிரோத துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர். இதுவரை 48 துப்பாக்கிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த துப்பாக்கிகளில் பெரும்பாலானவை கடந்த காலத்தில் வழங்கப்பட்டவை.
மேலும், இந்த அரசாங்கத்தின் கீழ் சட்டவிரோத ஆயுத வியாபாரம் இடம்பெறாது. பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில், புலனாய்வுத் தகவல்கள் மூலம் இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதாள உலக நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற அனுமதிக்கப்பட மாட்டாது. இதுபோன்ற செயல்பாடுகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க நாம் பாடுபடுகிறோம்.
இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற பாதாள உலகக் கும்பல்களுக்கு எந்த அரசியல் அடைக்களமும் கிடைக்காது என்றும் பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் வலியுறுத்தினார்.