நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும், அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் விரைவில் இல்லாதொழிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டபிள்யூ.ஆர்.பி. செனவிரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கும்பல்களுக்கு இடையே பல மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அந்தக் குற்றங்களில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களையும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளினால் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் கூறினார்.
இந்த சம்பவங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கும்பல்களுக்கு இடையே மோதல் சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் பங்களிக்கின்ற, அரசியலும் இதில் ஈடுபட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குற்றவாளி கும்பல்களின் தலைவர்கள் மற்றும் குற்றவாளிகள் பலர் வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த சந்தேக நபர்களை இலங்கைக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த இராஜதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்கும் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், சமீபத்திய நாட்களில் சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.