சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது.
நச்சுயிரியல் வல்லுநரான ஷி ஷெங்லி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் புதிய வகை வைரஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வௌவால் கொரோனா வைரஸ்கள் குறித்து ஷி ஷெங்லி மேற்கொண்ட ஆய்வுகளில் வூஹான் பல்கலைக்கழகம் மற்றும் வூஹான் நச்சுயிரியல் மையத்தின் கீழ் இயங்கும் ஆங்சூ ஆய்வகம் மற்றும் ஆங்சூ அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றி உள்ளனர்.
புதிய வகை கொரோனா வைரஸ் ஹெச்.கே.யு.5 (HKU5) என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸூம் மனிதர்களின் சுவாச மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த வைரஸை வௌவால்களில் இருந்து தனிமைப்படுத்தினால், அவை மனிதர்களிடத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் குடல் உறுப்புகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ளன.
HKU5-CoV-2 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மனிதர்களை பாதிக்கும் என்றாலும், அதன் பரவல் வீரியம் கோவிட் 19 வைரஸை விட சற்று குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.