பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் நிச்சயமாக பாதாள உலகத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்காக சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அவருடைய தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்புத் தொடர்பில் இங்கு கருத்துத் தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, இது தொடர்பில் முன்மொழிவொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் சோதனையிடுவதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.