தியனன்மென் சதுக்கப் படுகொலையைக் குறிக்கும் வகையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற சிலை அகற்றப்பட்டுள்ளது.
1989 இல் சீன அதிகாரிகளால் கொலை செய்யப்பட்ட ஜனநாயக ஆதரவு எதிர்ப்பாளர்களை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சிலை, படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் குவிக்கப்பட்டிருந்ததை வெளிக்காட்டும் விதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
தியனன்மென் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஹொங்கொங்கில் எஞ்சியிருக்கும் சில பொது நினைவுச் சின்னங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த சிலையை அகற்ற ஹொங்கொங் பல்கலைக்கழகம் முதலில் ஒக்டோபர் மாதம் உத்தரவிட்டது.
இந் நிலையில் ஹொங்கொங்கில் சீனாவின் அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருவதானால் குறித்த சிலை நேற்று இரவு அகற்றப்பட்டுள்ளது.
1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள் என்பது 1989 இல் சீனாவின் தலைநகரம் பீஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டங்களை குறிக்கும்.
சீன மாணவர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். 1989 ஏப்ரல் 15ம் திகதி தொடங்கிய போராட்டம் வலுப்பெற்று, அதே ஆண்டு ஜூன் 4, அன்று, சீனாவின் தியான்மென் சதுக்கத்தில், மாணவர்கள் பெருமளவில் கூடினர்.
ஆனால் சீன அரசு இந்த போராட்டத்தை இராணுவ டாங்கர்களாலும், துப்பாக்கிகளாலும் நசுக்கியது. பீஜிங்கின் வீதிகளில் அப்பாவி மாணவர்களின் இரத்தம் வீதியில் ஆறாக ஓடியது.
இந்த அடக்குமுறை நடவடிக்கையில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பது இது வரை தெளிவாகத் தெரியவில்லை. எனினும் சீனா இதன்போது சுமார் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.