இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள 05 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான “கணேமுல்ல சஞ்சீவ” எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், வழக்கறிஞர் போல் மாறுவேடமிட்டு நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர் துப்பாக்கியினை மறைத்து கொண்டு வந்த சட்டம் சார்ந்த புத்தகம் ஒன்று பொலிசாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றபோது நீதிமன்ற வளாகத்தினுள் இருந்த பொதுமக்கள் அனைவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு அனைவரும் இராணுவத்தினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், நீதிமன்றத்திற்கு முன்பாக இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.