உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மூன்று ஆண்டை நெருங்கும் இந்த போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் இன்று சவுதி அரேபியாவில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் தொடங்கியது. மூன்று ஆண்டை நெருங்கும் நிலையிலும் போர் நீடிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன் என்று அறிவித்தார். தற்போது அவர் அமெரிக்காவின் அதிபராகி உள்ளார். இதையடுத்து போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுடன், டொனால்ட் டிரம்ப் தொலைபேசியிலும் பேசினார். அப்போது ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக இருதலைவர்களும் பேசினர். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா- ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ரியாத் நகருக்கு சென்றுள்ளனர்.
ரஷ்யா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜனாதிபதி விளாடிமிர் புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர். அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டொனால்ட் டிரம்பின் தேசிய ஆலோசகர் மைக் வால்ட்ஸ், மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோர் சென்றுள்ளனர்.
இதுபற்றி ரஷ்ய ஜனாதிபதியின் கிரெம்ளின் அமாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,” அமெரிக்க- ரஷ்ய இடையிலான உறவுகளை மீட்டெடுப்பது, உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பது ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய இடம்பெறும்” என்றார். இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இது உக்ரைனை அதிருப்தியடைய வைத்துள்ளது.
இதுபற்றி பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி”சவுதியில் நடக்கும் பேச்சுவார்த்தையில் பங்குபெற உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. உக்ரைன் அதிகாரிகள் இல்லாமல் நடக்கும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பலனளிக்காது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகளையும் ஏற்கமாட்டோம்” என்றார். இதனால் இன்று அமெரிக்கா – ரஷ்ய அதிகாரிகள் பேசி போர் நிறுத்தம் தொடர்பாக ஏதேனும் முடிவு செய்தால் அதனை உக்ரைன் ஏற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேநேரத்தில் சவுதி அரேபியாவுக்கு நாளை உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி செல்ல உள்ளார். அவர் தனது மனைவியுடன் அங்கு செல்கிறார். இந்த பயணம் கடந்த வாரமே முடிவு செய்யப்பட்டது. இது அவரது தனிப்பட்ட பயணமாகும். இந்த பயணத்தின்போது அவர் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா தலைவர்களை சந்திக்க மாட்டார் என்று உக்ரைன் அறிவித்துள்ளது.