நாடு தற்போதுள்ள நிலைமையில் வாகனங்களை இறக்குமதி செய்வது ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் இன்று (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் தனது உரையில் தெரிவிக்கையில்;
“எனக்கு இன்னொரு பெரிய கனவு இருந்தது அதுதான் ஜப்பானிய பைக் வாங்கணும்னு… 1.4 மில்லியனுக்கு ஒரு விட்ஸை வாங்க முடியும் என்று யாரோ சொன்னார்கள்… நான் அதனை தேடித் பார்த்தேன், Toyota Raize 122 இலட்சம், Yaris 185 இலட்சம், Prius 289 இலட்சம்.. இங்க ஒரு பெரிய பிரச்சினை உருவாகி இருக்கு. நேற்று ஜனாதிபதி இந்த வரி உயர்வின் பெரும்பகுதி மோட்டார் வாகன இறக்குமதி மூலம் உருவாக்கப்பட்டது என தெரிவித்திருந்தார்.
அது குறித்து நான் தேடிப்பார்த்தேன். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரிகள் சுமார் 1.6% வீதத்தால் அதிகரிக்க வேண்டும். அதில் பாதி வாகன இறக்குமதியிலிருந்து வருகிறது. எனவே வாகனங்களை இறக்குமதி செய்வது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால் இவ்வளவு விலைக்கு யார் வாகனங்களைக் கொண்டு வருவார்கள்? இலங்கையில் இதுபோன்ற வாகனங்களை வாங்கும் அளவுக்கு பணக்காரர்கள் இல்லை என்று நினைக்கிறேன்.”