உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் இருப்பதாக அடையாளம் காணப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிற நபர்களின் உயிரைப் பாதுகாக்க காவல்துறை அல்லது சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட நபருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா? என்பது குறித்து பகுப்பாய்வு நடத்துவதும் வழக்கம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து சமூகத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் மற்றொரு முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
‘உங்களிடம் இல்லாத பாதுகாப்பு டிரான் அவர்களுக்கு ஏன் இருக்கிறது?’
அண்மையில் நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அந்த நேரத்தில், ஒரு பத்திரிகையாளர் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், “உங்களுக்கே இல்லாத எஸ்.டி.எஃப் பாதுகாப்பு டிரான் அலஸுக்கு எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது?” என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உயிருக்கு ஆபத்தில் இருப்பதாக நம்பப்படும் நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பிற்காக 19 பொலிஸ் சிறப்புப் படை (STF) உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் சிறப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
டிரான் அலஸுடன் 7 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் பிற இடங்களைப் பாதுகாக்க மேலும் 12 பேர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி, அவரது பாதுகாப்புக்காக 19 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
“டிரான் அலஸ் அமைச்சராக இருந்ததிலிருந்தே அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் பாதாள உலக உறுப்பினர்களிடமிருந்து இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருந்ததாக நான் நினைக்கிறேன். எனவே, மேலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மே 22, 2023 அன்று, பாதாள உலக உறுப்பினர்களிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாக உளவுத்துறை அறிக்கைகள் கிடைத்ததாகக் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“இப்போது எனது பாதுகாப்பிற்காக ஆறு STF உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, காவலர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைக்கப்பட்டது. எனக்கு மட்டுமல்ல, எனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று புலனாய்வு அறிக்கைகள் எச்சரித்திருந்தன,” என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் இது குறித்து நாம் வினவிய போது தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கருத்து தெரிவிக்கையில்; பாதுகாப்பு தேவைப்படுபவர்களை அடையாளம் காண ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல்கள் குறித்த பகுப்பாய்வு நடத்தப்படுவதாகக் கூறினார்.
“சிலரை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழங்கத் தேவையில்லாதவர்கள் இருந்தால், அது குறித்து முடிவு எடுக்கப்படும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்த பகுப்பாய்வை நடத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தேவையற்றவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பாதுகாப்பையும் அகற்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
“பாதுகாப்பு நிபுணர்கள் பாதுகாப்பு குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் அச்சுறுத்தல்களை பகுப்பாய்வு செய்கிறார்கள். யாராவது ஒரு கோரிக்கை வைத்தால், அவர்கள் பாதுகாப்பை பகுப்பாய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள். அந்த அறிக்கைகளின் அடிப்படையில், பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமா, எவ்வளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும், வழங்கப்படும் பாதுகாப்பு அதிகமாக உள்ளதா அல்லது போதுமானதாக இல்லையா என்பதை நாங்கள் பரிசீலிக்கிறோம்?” என்று அவர் மேலும் கூறினார்.
டிரான் அலஸின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் மறுஆய்வு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.